உலகம் முழுவதும் உள்ள கார் பந்தய ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் ஒரே ‘கருப்புத் தங்கம்’ லூயிஸ் ஹாமில்டன். ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் முதல் கருப்பின ஓட்டுனர் என்ற பெருமைக்கு சொந்தமான லூயிஸ் ஹமில்டன் லண்டனுக்கு வடக்கே ஸ்டீவனேஜ் என்ற சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்த மாதம் 7ஆம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி னார். அவரது தந்தை அந்தோணி ஹாமில்டன் கருப்பினத்தவர். தாய் கார்மென் பிரிட்டிஷ் வெள்ளை இனத்தவர். இவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். லூயிஸ் ஹாமில்டன் குழந்தையாக இருந்த போது இரண்டு வயதில் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். தாய் வழி சொந்தமான ஒன்றுவிட்ட மூத்த சகோதரியின் வீட்டில் 12 வயது வரை வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் லூயிஸ் ஹாமில்டன் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கருப்பினத்தவர் என்பதால் இனவெறி நிறவெறி தாண்டவமாடியது. சக மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கேலி கிண்டல் செய்துள்ளனர். அந்த சமயம் தன்னை தற்காத்துக்கொள்ள கராத்தே கலையும் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது மாணவர் ஒருவரை தாக்கி யதால் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவப்பருவத்தில் கால்பந்து மற்றும் கிரிக்கெட்டில் பயிற்சி எடுத்துள்ளார். பல போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்பை முடித்திருக்கிறார்.
புயல் வேகம்...
இனவெறிப் பிரச்சனையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கிருத்துவ பள்ளிக்கு மாறினார். பத்து வயதில் பிரிட்டிஷ் கேடட் கார்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இளைய ஓட்டுனராக உருவெடுத்தார். மெல்ல மெல்ல கார் பந்தயத்தில் கவனத்தை திருப்பினார். முதல்முறையாக ஃபார்முலா -1 அரங்குக்குள் அறிமுகமாகும் வீரர்களை “ரூக்கி” என்பார்கள். அத்தகைய வீரர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படும். தங்களது திறமையை முழுமையாக நிரூபித்தால் மட்டுமே ஃபார்முலா 1 பந்தயத்தில் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர முடியும். கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் கருப்பு என வீரர் லூயிஸ் ஹாமில்டன் என்பதால் நிச்சயமாக அவர் தோல்வி அடைந்து விடுவார் என்று எல்லோரும் கூறினார்கள். அவரது தோல்வி தனிப்பட்ட தோல்வியாக மட்டும் பார்க்கப்பட மாட்டாது. இதற்கு காரணம், கிமிரைன் கோணன், ஃபிலிப் மாஸா, பெர்னாண்டோ அலோன்சோ போன்ற ஜாம்பவான்களுடன் அன்றைக்கு முதன்முதலாக களத்தில் மோதினார். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பந்தயத்தில் அணி வகுத்தார். சிறப்பாக செயல்பட்டார். புள்ளிகளையும் குவித்தார். இறுதியில் வெற்றி பெற்றது லூயிஸ் ஹாமில்டன். தன் முதல் போட்டியிலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பிரமிக்க வைத்தார்.
வல்லவனுக்கு வல்லவன்!
ஃபார்முலா-ஒன் அரங்கின் அடுத்த அரசன் (லூயிஸ் ஹாமில்டன்) வந்து விட்டான் என்று அன்றே உலகம் புகழ்ந்து பாராட்டியது. அது உண்மை என்பதை இன்றுவரையிலும் நிரூபித்து வருகிறார். அப்படி ஒரு முதல் சீசன் நிறைவு செய்த வீரரையும் ஓட்டுனரையும் இதுவரை இந்த உலகம் கண்டதில்லை. அவரைப்போல் சாதனைகள் படைத்த வரும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிலைநாட்டுகிறார். கால்பந்து உலகில் கிறிஸ்டினோ ரொனால்டோ, மெஸ்ஸி, கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படி ஒட்டுமொத்தமாக சாதனைகளை வைத்துள்ளார்களோ அதைப்போன்று பார்முலா 1 கார் பந்தயத்தின் சாதனை புத்தகத்தில் லூயிஸ் ஹாமில்டன் பெயர் தான் அதிகம் இடத்தில் இருக்கிறது. அதிக வெற்றி, அதிகப் போடியும், அதிக கோல்கள் என்று ஷூமேக்கர் செய்யாத பல சாதனைகளையும் செய்தார் லூயிஸ். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தார். ஷூமேக்கர் பெற்ற வெற்றிகள் 91 தான்.
நிறவெறி ஆதிக்கம்...!
2001 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பார்முலா குளிர்கால தொடரில் தனது முதல் பயணத்தை தொடங்கி வெற்றிகர மாக நிறைவு செய்தார். ஆனாலும், இங்கிலாந்தில் நிலவிய நிறவெறி ஆதிக்கம், வரி விதிப்பு அவரை சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேற செய்தது. சொந்தமாக வீடும் வாங்கினார். திருமணத்திற்கு பிறகும் அங்கே வசித்தார். ஆனாலும் தாய் நாட்டுக்காக பிரிட்டிஷ் கொடியுடன் பந்தய களத்தில் வலம் வருகிறார். தனது தலைமுறையின் மிகச்சிறந்த வீரரான லூயிஸ் பார்முலா-1 பந்தயத்தில் பங்கேற்று ஒவ்வொரு ஆண்டு சீசனிலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்தார். 6 மற்றும் 7வது பந்தயங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி னார். 15 சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்த நிலையில் இவர்தான் ‘நம்பர் ஒன்’. மீதமிருந்தது இரண்டு பந்த யங்கள் தான். ஆனால் அந்த இரண்டு பந்தயங்களும் அவருக்கு சாதகமாக அமையவில்லை. ஒரே ஒரு புள்ளியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பறிகொடுத்தார். ஃ பார்முலா1 கார் பந்தயத்தில் ஒட்டுமொத்த உலகமும் தன்னை திரும்பி பார்க்க செய்த லூயிஸ், ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த ஷூமேக்கரின் சாதனையை கடந்த ஆண்டின் இறுதியில் சமன்செய்து சரித்திரம் படைத்திருப் பார். ஆனால், கருப்பினத்தவர் ஒருவர் இத்தகைய ஈடு இணையற்ற சாதனைப் படைத்து வரலாற்று நாயகனாக உருவெடுத்து விடக்கூடாது என்பதற்காக, கடைசி இரண்டு பந்தயங்களில் நடந்த லாபி நாடகத்தில் அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது.
மனித நேயம்!
அமெரிக்காவில் சினத்தவர் தாக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நிறவெறிக்கு எதிராகவும் கருப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தனது ஹெல்மெட்டில் லட்சினையை (லோகோ) ஒட்டிக் கொண்டவர் லூயிஸ் ஹாமில்டன். பந்தயத்தில் பங்கேற்கும் ஓட்டுனர்கள் தங்களது ஹெல்மெட்டை அடிக்கடி மாற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டு காலமாக லூயிஸ் ஹாமில்டன், கருப்பின மக்களுக்கு ஆதரவாக லோகோ அணிந்த அந்த ஹெல்மெட்டை மாற்றாதது மட்டுமல்ல; பிரத்யோகமாக வடிவமைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கார்ப்பரேட் அரசியல் கார் பந்தயத்தின் அடிப்படைக்கு எதிராகவும் தனது குரலை உயர்த்தியவர் லூயிஸ். இன்னொரு அணியின் இளம் வீரர் ஒருவரை கார்ப்பரேட் அரசியல் ஓரங்கட்டியது. அப்போது இதற்கு எதிராக “பணம் ஒரு ஓட்டுநரின் கனவுகளை கலைப்பது மிக மோசமானது” என்று செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே தனது கருத்தை வெளியிட்டார். கார்ப்பரேட்டுகளின் அரசியலை ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இப்படி இவரைப்போல் இதற்கு முன்பு யாரும் வெளிப்படையாக விமர்சித்தது கிடையாது. சமூகத்துக்கு தேவையான போது குரலையும் உயர்த்தி வருகிறார் இந்த உலக சாம்பியன். மனிதர்களுக்காக, மனிதர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருவதால் தான் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் மகத்தான சாம்பியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் லூயிஸ் ஹாமில்டன். இதனால்தான் இவர் யாராலும் தொட முடியாத உச்சத்தை அடைந்திருக்கிறார்.
- சி.ஸ்ரீராமுலு